தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மீது பண மோசடி புகார்.

 ஈரோடு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மீது பண மோசடி புகார்.



ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி நாகர் பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி மனைவி பிரபா (48). இவர் கோபி அருகே வண்ணாந்துறைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பிரபா நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: 

நான் கடந்த 2014ம் ஆண்டு குடும்ப செலவிற்காக, ஈரோடு சொட்டையம் பாளையத்தை சேர்ந்த ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் எனது வீட்டைஅடமானம் வைத்து ரூ.15லட்சம் பெற்றேன்.


இதற்காக மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் வட்டி முறையாக செலுத்தி வந்தேன். தற்போது முழு பணத்தை செலுத்தியும், என்னுடைய அடமானத்தை ரத்து செய்து கொடுக்காமல் வீண் காலதாமதம் செய்து வருகிறார். நான் வாங்கிய ரூ.15 லட்சத்திற்கு தற்போது ரூ.60 லட்சம் கொடுத்தால் தான் வீட்டை திரும்ப எழுதி தர முடியும் என கூறி, தினந்தோறும் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி மிரட்டி வருகிறார். என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் எனது மூலமாக முத்துராமசாமியிடம் கடன் பெற்றனர்.


அப்போது, அவர்கள் கொடுத்த நிரப்பப்படாத காசோலைகள், பாண்டு பேப்பர், கடனுறுதி பத்தி ரத்தை கடன் தொகையை திரும்ப செலுத்தியும் முத்துராமசாமி நிரப்பப்படாத காசோலைகளை வைத்து, வேறு நபர்கள் மூலம் வழக்கு தொடர்ந்து வருகிறார். 


முத்துராமசாமி அரசு பணியில் இருந்து கொண்டு என்னைபோல் பல ஆசிரியர், ஆசிரியைகளிடம் 100 ரூபாய்க்கு 10 முதல் 15 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து பல சொத்துக்களை குவித்துள்ளார். எனவே, முத்துராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 


இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இதே மனுவை, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தொடக்க கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி செயலாளர், மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலருக்கும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments