ரூ.50 இலட்சம் மோசடி, வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது.

 ரூ.50 இலட்சம் மோசடி, வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது.




வாணியம்பாடி அருகே தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ₹50 லட்சம் மோசடி செய்ததாக கல்வித்துறை பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாயப்பன் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (75), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ₹50 லட்சம் கொடுத்து பங்குதாரராக சேரலாம் என வாணியம்பாடி புத்துக்கோவில் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் (67), நாட்றம்பள்ளி தாலுகா கத்தாரி கிராமத்தை சேர்ந்த ஆலங்காயம் வட்டார கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா மற்றும் அவரது கணவர் செல்வம் (66) ஆகியோர் கூறியுள்ளனர். இதனை நம்பிய பார்த்தசாரதி ₹50 லட்சம் கொடுத்தாராம். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு சித்ரா உள்ளிட்ட 3 பேரும் பார்த்தசாரதியை பங்குதாரராக சேர்க்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.


இதுதொடர்பாக அவர்களிடம் கேட்ட போது சரிவர பதில் தரவில்லையாம்.


இதுகுறித்து பார்த்த சாரதி தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தர்மபுரி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  


வட்டார கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா, சம்பத், செல்வம் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments