பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு குச்சி வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து

 பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு குச்சி வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து.




மாணவர்களின் எதிர்கால நலனுக்காக சின்ன தண்டனை கொடுத்தால் கிரிமினல் வழக்கு வந்துவிடுமோ என பயந்துகொண்டு ஆசிரியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருக்கக்கூடாது என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.



கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


அந்த வழக்கில் முன் ஜாமின் பெறுவதற்காக ஆசிரியர் கேரள ஐகோர்ட்டில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:


"பள்ளி மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்காக ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பு வைத்திருக்க வேண்டும். கம்பை உபயோகிக்காமல் அதை ஆசிரியர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.


மாணவர்களின் எதிர்கால நலனுக்காக சின்ன தண்டனை கொடுத்தால் கிரிமினல் வழக்கு வந்துவிடுமோ என பயந்துகொண்டு ஆசிரியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருக்கக்கூடாது. 


யாராவது புகார் அளித்தார்கள் என்பதற்காக போலீஸார் உடனே வழக்குப்பதிவு செய்யக்கூடாது. இளம் தலைமுறையினரின் செயல்பாடு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


இளம் தலைமுறையில் சிலர் போதை பொருள்களுக்கு அடிமைகளாக இருப்பதை பார்க்க முடிகிறது. முன்பு இப்படி ஒன்றும் இல்லை. 


ஆசிரியர்களை மிரட்டி பயமுறுத்துவது, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செய்திகள் இப்போது வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புதிய தலைமுறைகளின் சிற்பிகள் தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டும் " என ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments