ஒருமையில் பேசிய ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.
ஈரோட்டில் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை மீளாய்வு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியதாகவும், அதனை கண்டித்தும் ஆசிரியர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அரசு பள்ளி அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, நிர்வாகிகள் சோமசுந்தரம், நேரு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்வு தொடர்பாக நடந்த முதுகலை ஆசிரியர்கள் மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசி உள்ளதை கண்டித்தும் 17பி சார்ஜ் போட்டு நிம்மதியாக ஓய்வு பெற விடாமல் அலைய விட்டு விடுவேன் என்றும் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள பள்ளிகளுக்கு மாற்றி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளதைக் கண்டித்தும் இதற்கு முதன்மைக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தினர். தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் சுப்பராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது. முதன்மைக்கல்வி அலுவலர், 'கூட்டத்தில் நான் ஆசிரியர்களின் மனம் புண்படும் படி பேசி இருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இனி வரும் நாட்களில் இதுபோன்று நடக்காது என உறுதியளிக்கிறேன்' என கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் முதன்மைக் கல்வி அலுவலர் நேரடியாக வந்து இந்த கருத்தை தெரிவிக்கும்படி கோஷங்கள் போட்டதால், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திம்மராயன் நேரில் வந்து முதன்மைக்கல்வி அலுவலரின் கருத்தை கூறியதையடுத்து சமாதானம் அடைந்த ஆசிரியை, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments