அகரம் விதைத் திட்டம் - விண்ணப்பிக்கும் நேரம்...
அன்பிற்குரிய உறுதுணையாளர்களுக்கு,
அகரம் ஃபவுண்டேஷனின் வணக்கங்கள்...!!!
'கல்வி' என்ற சொல் இங்கு நாளுக்கு நாள் வெவ்வேறு அர்த்தங்களை நோக்கி பயணிக்கிறது. தொடர்ந்திருக்கும் நோயச்சக் காலம் எளிய குடும்பங்களை சேர்ந்த வீட்டுப் பிள்ளைகள் கல்வித் தளத்தில் பின்தங்கி இருக்கச் செய்திருக்கிறது. அதனை சரி செய்திடும் முயற்சிகள் ஆங்காங்கே ஒளிக் கீற்றுப் போல் தென்பட்டாலும், நாம் சென்றடைய வேண்டிய தூரங்கள் இன்னும் இருக்கிறது. பாராபட்சம் இல்லாத சமூக நல்லிணக்கம் உருவாக்கிட சமமான கல்வி யாவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். இன்றைய குழந்தைகள் தான் எதிர்கால சமூகத்தினர் என்ற புரிதலோடு குழந்தைகள் ஒவ்வொருவருக்குமான கல்வி உறுதி செய்யப்படவேண்டும். ஆட்சியாளர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் இந்த புரிதலோடு பயணிக்கத் தொடங்குவது என்றைக்கும் தேவையாக இருக்கிறது.
அகரம் ஃபவுண்டேஷன் விதைத் திட்டம் வாயிலாக எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 4100 மாணவ மாணவியர் கடந்த 12 ஆண்டுகளில் விதைத் திட்டம் வாயிலாக கல்லூரி கல்வி பெற்றிருகின்றனர். கடந்த பெருந்தொற்று நோய் அச்சக் காலத்திலும் சமூகப் பணியாளர்கள் தங்கள் பணிகளை தொடர்ந்திருந்தார்கள், அதன் பலனாக 2021 - 2022 கல்வியாண்டில் 658 மாணவ மாணவியர்கள் கல்லூரி கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றார்கள். ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் உளப்பூர்வமான பங்கேற்ப்பினாலேயே அகரம் பணிகள் யாவும் சாத்தியமாகிறது. எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி பெற்று சமூகத்தில் அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கண்டடைந்ததில் அகரத்துடன் உறுதுணையாக இணைந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பும்... நன்றிகளும்...
கடந்த வருடங்களைப் போலவே, இந்த வருடத்திற்கான அதாவது 2022 - 2023 கல்வியாண்டிற்கான அகரம் விதைத் திட்ட தேர்வுப் பணிகள் தொடங்கியிருக்கிறது. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள, அவர்கள் வாழ்வில், வளர்ச்சியில் அக்கறையுள்ள தங்களின் பங்கேற்ப்பை எதிர்பார்க்கிறோம். உங்கள் பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் +2 பயிலும் மாணவ மாணவியரை விண்ணப்பிக்க சொல்லி வழிகாட்டுங்கள்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள : +91 44 43506361 | Mobile : +91 9841891000
நன்றிகளுடன்,
அகரம் ஃபவுண்டேஷன்.
0 Comments