🛟ஆசிரியரை மாணவர்கள் முன்பு முட்டி போட வைத்த ஊராட்சிச் செயலர்.
![]() |
| CCK News |
பெரம்பலூர் அருகே அரசு பள்ளியில் மகனை முட்டி போட வைத்து பனிஷ் 'மென்ட் கொடுத்த ஆசிரியரை ஊராட்சிச் செயலர் வகுப்பறைக்குச் சென்று ஆசிரியரை மிரட்டி மாணவர்கள் முன்பு முட்டி 'போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் கரும்பலகை மற்றும் சுவர்களில் சில ஆபாசமான வசனங்கள், கருத்துப்படங்கள் எழுதப் பட்டிருந்தது. இதை யார் செய்தது என 12ம் வகுப்பு ஆசிரியர் கபில்தேவ் கேட்டபோது மாணவர்கள் அனைவரும் எனக்குத் தெரியாது சார் என்று மாறி மாறி பதில் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கபில்தேவ், நீங்கள் எழுதவில்லை என்றால் யார் எழுதியது என்பதை சொல்லுங்கள். அதுவரை அனைவரும் முட்டி போடுங்கள் என்று கூறியதுடன் அனைவரையும் முட்டி போட வைத்தார்.
![]() |
| cckkalviseithikal |
முட்டிபோட்டதில் தேனூர் ஊராட்சி செயலாளர் ராஜசேகரின் மகனும் ஒருவர் ஆவார். அந்த மாணவர் வீட்டுக்கு சென்று ஆசிரியர் முட்டி போட வைத்ததை கூறி வருத்தப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் (31ம் தேதி) பள்ளிக்கு வந்து எனது மகனை முட்டி போட சொல்லும் அளவுக்கு ஆசிரியருக்கு துணிச்சல் உள்ளதா என சத்தம் போட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் வகுப்பறையில் நீங்கள் பண்ணுகிற அட்டகாசம் தெரியாதா? எனது மகன் மட்டும் தான் அட்டகாசம் செய்து விட்டானா?. இதற்கு வகுப்பு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். அதுவரை ஆசிரியர் முட்டி போட வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த ஆசிரியரை பற்றி நான் புகார் கூறுவேன் எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.
இதனால் கபில்தேவ் வகுப்பில் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் முட்டி போட்டார். பின்னர் ராஜசேகர் பள்ளியிலிருந்து வெளியே சென்றவுடன் கபில்தேவ் எழுந்து சென்று தலைமையாசிரியரிடம் முறையிட்டார்.
ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் புகார் அளிக்க முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுடன் நேற்றிரவு 8 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கபில்தேவ் சென்றார்.
இதற்கிடையில் கபில்தேவுக்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்டத்தில் மற்ற பள்ளிகளை சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மருத்துவ விடுப்பில் சென்றதை அறிந்து பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சதாசிவத்திடம் தகவல் தெரிவித்ததுடன், கலெக்டர் ஷரண்யா அறியை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
முதுகலை ஆசிரியர் கபில்தேவ் உள்ளிட்ட ஆசிரியர்கள் அளித்த புகார் மனுவை பெற்ற கலெக்டர் ஷரண்யா அறி, மாவட்ட பொறுப்பு முதன்மை கல்வி அலுவலர் மூலம் விசாரணை நடத்துவதாக கூறினார்.
வகுப்பறையில் மாணவர்கள் முன்பு ஆசிரியரை ஊராட்சி செயலாளர் முட்டி போட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments