பணி நிரந்தர ஆணை வழங்க ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ஜான் சிபு மாணிக். அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை பணி நிரந்தரம் செய்ய பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பணி நிரந்தரம் செய்ய பள்ளிக்கல்வித் துறை மறுப்பு தெரிவித்தது.
இதனால் ஜான் சிபு மாணிக் சென்னை ஐகோர்ட்டை அணுகினார். அவருக்கு பணி நிரந்தர ஆணை வழங்கவும், சம்பள நிலுவை தொகையை வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்காகஜான் சிபு மாணிக், நீலகிரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார். ஆனால் அவர் லஞ்சமாக ரூ.5 லட்சம் கேட்டார். அவ்வளவு பணம் ஜான் சிபு மாணிக்கிடம் இல்லை என்பதால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.2 லட்சம் மட்டும் லஞ்சமாக கொண்டு வர சந்தோஷ் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
எனினும் லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் ஜான் சிபு மாணிக், ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களது அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி வீட்டில் வைத்து சந்தோஷிடம் ஜான் சிபு மாணிக் வழங்கினார்.
அந்த பணத்தை சந்தோஷ் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
0 Comments