ஆயக்குடி அருகே கி.பி. 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு.

 ஆயக்குடி அருகே கி.பி. 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு.



ஆயக்குடி அருகே காளிப்பட்டியில் செங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மதகு பகுதியில், குமுழி தூணில் பழமையான கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் 2 உள்ளன. இதுபற்றி பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-


காளிப்பட்டி செங்குளத்தின் வடக்கு பகுதி கரையோரம் மதகில் இருந்து நீர் வெளியேறும் பகுதியான குமுழித்தூணில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப் பட்டு உள்ளது. அது கி.பி.16-ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது. இது 11 வரிகளில் எழுதப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டில் பசுவக்குடும்பன் என்பவர், ஆடி மாதம் 30-ந்தேதி புதிதாக குளம் வெட்டி மதகு அமைத்து கொடுத்தார் என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கல்வெட்டு அருகில் பசுவக்குடும்பன், அவரது மனைவி மஞ்சம்மாள் ஆகியோரின் உருவங்களும் சிற்பமாக உள்ளது. இந்த பசுவக்குடும்பன் யானை மீது ஊர்வலமாக வரும் வழக்கம் உள்ளவர் என்றும், இவரது யானை நீர் அருந்த தொட்டி கட்டி உள்ள தாகவும் செவிவழி செய்திகள் உள்ளன. இந்த செங்குளத்துக்கு நீராதாரமாக நல்லதங்காள் ஓடை உள்ளது. இந்த ஓடையில் இருந்து கிளை வாய்க்கால் வெட்டி அதை குளத்துடன் இணைத்து இருக்கிறார். அவ்வாறு சேமித்த நீரை பயன்படுத்தி பாசன வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments