திருடன் கையிலே பள்ளிகளை கொடுத்த ஸ்டாலின்! -சாவித்திரி கண்ணன்

 திருடன் கையிலே பள்ளிகளை கொடுத்த ஸ்டாலின்! -சாவித்திரி கண்ணன்

December 20, 2022


தமிழக அரசு பள்ளிகளுக்கு இனி, டிவிஎஸ் வேணுசீனிவாசன் தான் கார்டியனா?







 முதல்வரிடம் தான் தொழில் அதிபர்கள் நிதி தருவார்கள்.


 இங்கு முதல்வரே தனியார் தொழில் அதிபரிடம் நிதி தந்து திட்டத்தை நிறைவேற்றக் கோருகிறார். 


அரசு பள்ளிகளுக்கான ஆபத்தே, 

இந்த திட்டத்தின் வழியாகத் தான் ஆரம்பித்துள்ளது..!


தமிழகத்தில் 37,000 அரசு பள்ளிகள் உள்ளன! 


இவற்றில் பல பள்ளிகள் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லாடுகின்றன!


 இந்தச் சூழலில், 

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற பெயரில் தனியார் பங்களிப்புடன் ஒரு திட்டம் துவங்கப்பட்டு முன்னாள் மாணவர்களிடமும், தொழில் அதிபர்களிடமும் நிதி கோரப்பட்டு உள்ளது.


இதைக் கேட்டதும் நமக்கு,

 ‘அடடா இப்போதாவது அரசு பள்ளிகளுக்கு ஒரு விடிவு ஏற்பட்டுவிட்டதே…’ எனத் தோன்றுவது இயற்கை! 


ஆனால், உண்மையில் இனி மேல் தான் பிரச்சினையே!


தமிழ்நாட்டில் கல்வித் துறை என்று ஒன்றுள்ளது. 


அதற்கு அமைச்சர் , ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் பெரிய நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது.


 அப்படி இருக்க, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியை ஏன் தனியாரிடம் தர வேண்டும்?


 தனியார் பங்களிப்பை பெற்றுக் கொண்டு, அரசே இதை செய்யலாமே.


 அப்படித் தானே காமராஜர் ஆட்சி காலம் முதல் இருந்து வருகிறது. 


அரசுப் பள்ளிகளை மிக அவல நிலையில் வைத்துள்ள தமிழக அரசு, 

ஒரு சிறிதும் குற்றவுணர்வின்றி, மிக ஆடம்பரமான விருந்தோடு, 

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 

நம்ம ஸ்கூல் விழாவை நடத்தியது. ஏன்?

இதை ஏதேனும் அரசு பள்ளியில் நடத்த முடியாதா..?


அவல நிலையில் அரசு பள்ளிகள்!


சென்ற ஆட்சியிலுமே கூட கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ‘சமூக பொறுப்புணர்வு மற்றும் முன்னாள் மாணவர் பங்களிப்பு திட்டம்’ என்ற ஒன்றை 2019 ல் ஆரம்பித்தாரே!


 அதற்கு நிதி தருபவர்கள் http;//contribution.gov.in என்ற தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தானே கூறப்பட்டது.


 ஆனால், இன்றோ, ‘முதலமைச்சரே பங்களிப்பு செய்ய விரும்பினாலும், அதை தனியார் மூலமாகத் தான் தர முடியும்’ என வேணு சீனிவாசனிடம் தருகிறார் என்றால், இதை எவ்வாறு புரிந்து கொள்வது?


திருடன் கையில் சாவியைக் கொடுப்பதா?


யார் இந்த வேணு சீனிவாசன்? 


ஒன்றா, இரண்டா..?


 இவர் மீது எத்தனை குற்றப் பின்னணி உள்ளன!


 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகக் கோவில்களை புனரமைப்பதாகச் சொல்லி அதற்கு பொறுப்பேற்று 

முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டு இவர் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா? 

நஞ்சமா? 


எந்தக் கோவிலை இவர் புனரமைப்பதாக பொறுப்பு ஏற்றாலும், அந்தக் கோவிலில் அறநிலையத் துறையின் அதிகாரம் செல்லாக் காசாகிவிடும்.


 கோவிலையும், அர்ச்சகர்களையும் தன் கண்ட்ரோலில் கொண்டு வந்தார் வேணு சீனிவாசன்,


*அனைத்துக் கோவில்களில் உள்ள அரும்பெரும் சிலைகளை அபகரித்து வந்த குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்தன*


 இவர் மீது ரங்கராஜன் நரசிம்மன் என்ற பெருமாள் பக்தர் பல திருட்டு வழக்குகளை போட்டுள்ளார்.


குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில்

 ‘மூலவர் விக்கிரகம்’ , மயிலாப்பூர் கபாளிஸ்வரர் கோவில்

 புன்னைவன நாதர் சன்னிதியில் ‘மயிலொன்று மலரெடுத்து சிவனை அர்சிக்கும் சிலை’ போன்றவை முக்கியமானவை!


 இதில் 

வேணு சீனிவாசன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது.


 அதற்காக நீதிமன்றம் சென்று உத்தரவு பெறப்பட்டதை அடுத்து, 

உடனே தலைமறைவாகி

 முன்ஜாமீன் வாங்கியவர் தான் வேணு சீனிவாசன்.


 அதன் பிறகு பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் தலைமை என்று ஓடி லாபி செய்து தப்பித்துக் கொண்டார்.


 இவரைக் காப்பாற்ற துக்ளக்கில் தலையங்கம் எழுதிக் கொந்தளித்தவர் குருமூர்த்தி!


இது குறித்து அப்போதே நம் அறம் இதழில்,


குற்றவாளிகளுக்கு துணை போன குருமூர்த்தி


என்ற கட்டுரையும் எழுதியுள்ளோம்.


 இப்படிப்பட்ட பின்னணி கொண்ட வேணு சீனிவாசனை ’டிவிஎஸ் சுந்தரம் அய்யங்கார் பேரன்’ என்ற ஒரே தகுதியில் கண்ணை மூடிக் கொண்டு நம்பி, 

பல கோடி மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்குவதா?


 குருமூர்த்தியின் ஆத்ம நண்பர் ஸ்டாலினுக்கு எப்படி நம்பகமானவர் ஆனார்?


வேணு சீனிவாசனின் நண்பர் ஆத்மார்த்த குருமூர்த்தி

குறைந்தபட்சத் தகுதியேனும் உள்ளதா?


ஏதோ தேவை இல்லாமல், 

*நாம் இல்லாத ஒன்றை பெரிதுபடுத்தி பேசுவதாக சிலருக்கு தோன்றலாம்!*


 ஆனால் சற்றே யோசித்துப் பார்த்தால் 

ஏழை, எளியவர்களுக்கான கல்வியில் 

வேணு சீனிவாசன் இது நாள் வரை காட்டிய ஆர்வம் என்ன? 


அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா?


 தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், சான்றோர்கள், சுயநலமில்லாத புரவலர்கள் என யாருமே இல்லையா..?


 இந்த திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப் பட்டுள்ளார். 


செஸ் சாம்பியனாக கோடிக்கணக்கில் சம்பாதித்த இவர், இது நாள் வரை தான் சம்பாதித்ததில் எத்தனை சதவிகிதம் ஏழை, எளியவர் கல்விக்காக செலவிட்டுள்ளார்?


 நடிகர் சூர்யாவைப் போல இந்த இருவரில் யாரேனும் ஒருவராவது ஏழை, எளியவர்கள் கல்விக்கு உதவியதுண்டா?


 இவர்கள் இருவரையும் மத்திய பாஜக அரசு நிர்பந்தத்தின் பேரில் தான் தமிழக அரசு நியமித்துள்ளது என்பதை மறுக்க முடியுமா?


இது முழுக்கவே பாஜகவின் வழிகாட்டலே!


தேசியக் கல்விக் கொள்கையின்படி அரசு பள்ளிகளை படிப்படியாகத் தனியாரிடம் வழங்கும் முயற்சியின் ஆரம்பமே இந்த திட்டம்! 


அதனால் தான் தனியாரிடம் நிதிபெற்று அரசு செய்ய வேண்டிய வேலையை

 – தன் நிதியையும் சேர்த்தளித்து – தனியாரிடம் முதல்வரே தருவதாகும். 


இனி எந்த சாதாரணக் குடிமகனும் தான் படித்த பள்ளிக்கு நேரடியாகச் சென்று விரும்பிய உதவியை செய்துவிட முடியாது.


 ஆம், 

இது வரை அப்படி விரும்பியவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்துப் பேசி விருப்பத்தை தெரிவிப்பார்கள்.


 தலைமை ஆசிரியர் கல்வித்துறைக்கு தகவல் தந்து, 

அரசின் ஒப்புதலுடன் பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வார்.


 இதில் இடைத்தரகர் கிடையாது. 


அதனால் நேரடியாக ஒரு உதவியை செய்து பார்த்து மகிழ்ந்து செல்ல முடியும்.


ஆனால் இப்போது இந்த "நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு" தான் நிதி தர வேண்டுமா?.

, தற்போது இந்த இடைத்தரகர் வழியாக மட்டுமே உதவ முடியுமா?.


 உதாரணத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் சைதை அரசு பள்ளிக்கு உதவக் கோரி ரூ ஒரு லட்சத்துக்கான காசோலையை வேணு சீனிவாசனிடம் வழங்கினார். 


அவரே சைதாப்பேட்டையில் குடியிருப்பவர். 


அத் தொகுதியின் சட்டமன்ற பிரதிநிதியே அவர் தான். 


அவர் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் உள்ளார். 


எனில், ஏன் அவரால் நேரடியாக தான் படித்த பள்ளிக்கு உதவ முடியவில்லை? என்பதை கவனிக்க வேண்டும். 


ஆக, இனி அரசு கல்வித்துறை டம்மியாக்கப்பட்டு, தனியார் டாமினேஷன் வருவதன் தொடக்கம் தானா இந்த திட்டம்?!??!


தேசிய கல்விக் கொள்கையின் திட்டமா இது???


இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேசன் வழியாக அரசு பள்ளிகள் நிதி உதவி பெறும் போது, அவர்களின் ஆளுமைக்குள் அவை படிப்படியாக செல்லும். 


அந்தப் பள்ளிக் கூடங்களில் மாலை நேர வகுப்பாக ‘ஸ்போக்கன் இங்கிலீஸ்’, ‘யோகா பயிற்சி’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகள் நுழைவது எளிதாகிவிடும்.


 அதை அரசு நினைத்தாலும் தடுக்க முடியாது!


 மேலும், தற்போது ஆசிரியர் பணியிடங்கள் பல நிரப்படாமல் உள்ளன!


 அவற்றை ஒப்பந்த முறையில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அத்துக் கூலிகளைப் போல தான் தமிழக அரசு நியமித்து வருகிறது.


 வருங்காலத்தில் அப்படியான ஆசிரியர்களை நியமித்து,

 சம்பளம் தருவதை தனியார் நிறுவனங்கள் ஏற்கும். 


பிறகு அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களை, விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்தது போல 

அரசுப் பள்ளிகளும் வழங்கப்படுமா?.


 ஏழை,எளியோருக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும்.


தேசியக் கல்விக் கொள்கையை முழுமூச்சாக செயல்படுத்தும் திமுக அரசு!


தமிழக முதல்வாராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மிக கமுக்கமாக 

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறார். 


‘இல்லம் தேடிக் கல்வி’, 

‘எண்ணும், எழுத்தும்’ போன்றவை 

தேசிய கல்விக் கொள்கையின் மிக நுட்பமான தீய அம்சங்களே என்பதை நாம் அறத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். 


அந்த வகையில் 

‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ வழியாக, 

இனி அரசு பள்ளிகள், படிபடியாக தனியார் வசம் செல்லும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின், 

தானே ரூபாய் ஐயாயிரத்திற்கான காசோலையை வேணு சீனிவாசனுக்கு வழங்கியதன் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளார்.


 இது வரை முதல்வர் மூலமே நிதி உதவி தருபவர்கள் தந்து கொண்டிருந்த நிலைமை மாறி, முதல்வரே

 ஒரு தனியாரிடம் அரசு பள்ளிகளுக்காக 

நிதி வழங்கும் 

சகிக்க முடியாத அவலத்தை நாம் பார்த்தோம்.


பள்ளி என்ற சொல் இருக்க ஸ்கூல் என்ற சொல் எதற்கு?


 தமிழ் என்றால் கசக்கிறதா திமுக அரசுக்கு..?


இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், கோடானுகோடி 

இளம் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கத் துணை போன குற்றச்சாட்டுக்கு தான் ஆளாக நேரும்.


 வருங்காலத் தலைமுறைக்கு பெரும்கேடு விளைவித்தவர்கள் ஆகிவிடுவோம்.


 ஆகவே, அனைத்து  ஆசிரியர், மாணவர் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் மேற்படி விவகரங்களை திறந்த மனதுடன் விவாதித்து, 

பெரும் போராட்டக களத்தில் இறங்க வேண்டும்.


சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்


 

“அறம்” வெளிப்படுத்தி இருப்பது அறச்சீற்றம். இன்னும் சுயமரியாதையுடன் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை இக்கட்டுரை மூலம் “அறம்” உணர்த்துகிறது. வாழ்த்தும் நன்றியும்.


கல்வி என்பது அரசியல் நடவடிக்கை. கல்வி மறுப்பது ஓர் அரசியல். கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்குவது மற்றொரு அரசியல். கல்வி மக்களை அதிகாரபப்படுத்தும். என்றுமே மக்களிடம் “இவர் இல்லை என்றால் நீ படித்திருக்கவே முடியாது” என்ற சிந்தனையை விதைப்பதே கொடை வள்ளல்கள் மூலம் கல்வி தரும் அரசியல். யாரையும், எதையும் எதிர்க்க முற்பட மாட்டார்கள். மீள முடியாத அடிமை மனநிலையில் மாணவர்களை வைத்திருப்பது ஈரோடு சுயமரியாதை பிரகடனத்திற்கு செய்யும் துரோகம். கொடை வள்ளல் கையில் பொதுக் கல்வி! 21ம் நூற்றாண்டில் இப்படி ஒரு நிலை தமிழ் நாடு சந்திக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.



Post a Comment

0 Comments