பள்ளிக்குச் செல்லாமல், வேறு ஒருவரை வைத்து பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட்.
காரிமங்கலம் அருகே பணிக்கு சரிவர செல்லாமல் வேறு ஒருவரை வைத்து ஆசிரியர் பணி செய்ததாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். cckkalviseithikal
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், மல்லிக்குட்டை ஊராட்சி ராமியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பாலாஜி (44) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி அடிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். இந்நிலையில், ஆசிரியர் பாலாஜி பணிக்கு சரிவர செல்லவில்லை எனவும், வேறு ஒருவரை வைத்து அவர் பணியாற்றிய பள்ளியில் பாடம் நடத்தியதாகவும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதன்பேரில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆசிரியர் பாலாஜி மீது கூறப்பட்ட புகார்கள் உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனடிப்படையில் பாலக்கோடு கல்வி மாவட்ட அலுவலர் சின்னமாது, ஆசிரியர் பாலாஜியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். பணிக்கு சரிவர செல்லாமல் வேறொருவரை வைத்து பணி மேற்கொண்ட அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments