கல்வியாளர்களின் கண்ணீர் பதிவு
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை
பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை; இதனால், பள்ளிக்கல்வித் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது; மாணவர்களின், ஆப்சென்ட்'டிற்கான காரணத்தை தேடி வருகிறது. இந்தச் சூழலில், வரும் ஏப்ரல், 6ல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்குகிறது.
அதற்கும் சேதம் வந்து விடக்கூடாது என்பதால், ஒவ்வொரு ஆசிரியரும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டி, அப்பா மகனே, என் கண்ணுல்ல... என் ராசா... தங்கக் கட்டி நாளைக்கு பரீட்சைக்கு வந்துடப்பா' என்று சொல்லி, 'தாஜா' பண்ணி அழைத்து, அவனை பரீட்சை எழுத வைக்க வேண்டுமாம்; இது, பள்ளிக் கல்வி அமைச்சரின் உத்தரவு.
படிப்பே வேண்டாம் என்று போன மாணவர்களை, தேடிக் கண்டுபிடித்து பரீட்சை எழுத வைப்பதால், யாருக்கு என்ன லாபம்?
அப்படியே அமைச்சரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து, பள்ளிக்கே வராத மாணவன், தேர்வு அறைக்கு வந்து பரீட்சை எழுதினால், என்ன எழுதுவான்? ஸ்ரீராமஜெயம் என்பதை கூட எழுதத் தெரியாமல், ஸ்ரீராமாநுஜம் என்றல்லவா எழுதுவான்.
வேண்டுமானால், திராவிட ஆட்சியில், 'பரீட்சைக்கு எல்லாரும் வந்தனர்...' என்று, தமிழக கல்வித் துறை வெட்கமில்லாமல் மார்தட்டிக் கொள்ளலாம். அதற்கும் ஒருபடி மேலே போய், 'பரீட்சைக்கு வந்த எல்லாருமே பாஸ்... என்றும் அறிவிக்கலாம். என்ன குடியா முழுகி விடப் போகிறது... தமிழகத்தின் கல்விக்கு என்றைக்கோ சமாதி கட்டியாயிற்று.
இன்னும் என்ன மீதமுள்ளது... என்றைக்கு ஆசிரியர்களின் அதிகாரத்தில் குறுக்கிட்டு, அவர்களின் உரிமைகளை அரசு பிடுங்கியதோ, அன்றே மாணவர்களின் ஒழுங்கீனமும் துவங்கி விட்டது; ஆசிரியர் மீதிருந்த பயமும், பக்தியும் விடை பெற்றுப் போய் விட்டது.
முன்பெல்லாம் ஆசிரியர்கள் என்றால், பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் என்று பொருள். இப்போது, மற்ற பல அலுவல்களையும் பார்ப்பதால், இந்த ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லித்தர நேரமில்லை; மாணவர்களுக்கும் படிப்பை தவிர, வேறு பல சுவாரஸ்யங்கள் இருப்பதால், பள்ளிக்கு வர நேரமில்லை.
அரசுக்கும், 'குடி'(க்கும்) மக்கள் மீதுள்ள அக்கறை இந்த, 'படி'க்கும் மாணவர்களிடம் இல்லை. மொத்தத்தில் கல்வி சீரழிந்து, கேலிக்கூத்தாகிவிட்டது என்பது தான், கல்வியாளர்களின் கண்ணீர் பதிவு.
ஆசிரியர் பணி உன்னதமானது' என்றார். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன். ஆனால், இன்று அது தான் சந்தி மாடல் சிரிக்கிறது. 'குக் வித் கோமாளி'க்கு இருக்கும் மரியாதை, 'புக் வித் அறிவாளிக்கு இல்லை!
0 Comments