அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு.
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்களை, உரிய திட்டமிடலுடன் நடத்த வேண்டும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் cckkalviseithikal உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
குழந்தைகள் நோய்வாய்ப்படுதல் மற்றும் உயிரிழப்பதை முற்றிலும் தடுக்க, ஆரம்ப நிலையில் பாதிப்புகளை கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது அவசியம். எனவே, பிறந்த குழந்தை முதல், 18 வயது வரையுள்ள அனைவருக்கும், 30 வகையான பாதிப்புகள் உள்ளனவா என்பதை துவக்கத்திலேயே கண்டறியும், 'தேசியகுழந்தைகள் நல மருத்துவ பரிசோதனை திட்டம்' தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, பிறவியிலேயே உள்ள பாதிப்புகள், பிறந்த பிறகு ஏற்படும் குறைபாடுகள்,நோய்கள், வளர்ச்சி குறைபாடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 1.45 கோடி குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு பள்ளிகளிலேயே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 4.35 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டன. அவர்களில், 1.14 லட்சம் குழந்தைகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக சிகிச்சை பெற்றனர். இதற்கான பணியில், மருத்துவ அதிகாரி, செவிலியர், மருந்தாளுனர், வாகன ஓட்டுனர் ஆகியோர் அடங்கிய, 805 மருத்துவ குழுவினர், ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அனைவரும், பள்ளிகளில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய வேண்டும். இது தொடர்பான தகவல் ஒருங்கிணைப்பை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுடன் சேர்ந்து செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் விபரங்களை மாதந்தோறும் மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்ப வேண்டும்.
குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அதன் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, முழுமையான உடல் பரி சோதனை நடத்தி, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அக்குழந்தையை தொடர்ந்து கண்காணிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் செயல்பாடுகளும் பள்ளி மாணவர்களுக்கான உடல் நலன் திட்டமும் முறையாக செயல்படுவதை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments