தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை (SEP) 2025 - முக்கிய அம்சங்கள்.

 தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை (SEP) 2025 - முக்கிய அம்சங்கள்.

Click here




தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை - 2025

பள்ளிக் கல்வி

வரைவுச் சுருக்கம்


கல்வியில் சமூக சமத்துவத்திற்காக ஆழமாக வேரூன்றிய மாநிலத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாகவும் தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை 2025 வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான ஆலோசனைகள் மற்றும் உள்ளார்ந்த பகுப்பாய்வு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கொள்கை, தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபு ஆகியவற்றை உள்ளடக்கி, முற்போக்குடைய ஒரு விரிவான குழந்தை மையப் பார்வையைக் கொண்டதாக அமைந்துள்ளது. இந்தக் கொள்கையின் ஒவ்வொரு இயலும் மறுகட்டமைப்புக்கும் புதுப்பித்தலுக்குமான வழிமுறையை கவனமுடன் முன்வைக்கிறது. மேலும், இது ஒரு எழுச்சிமிக்க, சமத்துவமான மற்றும் எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கல்விமுறைக்கான ஒரு திட்ட வரைவை


1.தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியின் சூழல், தொலைநோக்குப் பார்வை மற்றும் தற்போதைய நிலை


இந்த இயலில் தொழில்நுட்ப அணுகல் வேறுபாடுகள், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய கற்றல் இடைவெளிகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் திறன்களின் தேவைகள் போன்ற புதிய சவால்களைக் கருத்தில் கொண்டு கல்வியில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சாதனைகளான அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியில் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், வலுவான நலத்திட்டங்கள் ஆகியவற்றை மறுசீரமைப்பதை இக்கொள்கை உறுதி செய்கிறது. உள்ளடங்கிய சமச்சீரான மற்றும் மீட்புத்தன்மையுள்ள ஒரு கல்விமுறை மூலம் ஒவ்வொரு குழந்தையின் திறனையும் வளர்ப்பது என்ற ஒரு கட்டாயத் தொலைநோக்குப் பார்வையை இது வெளிப்படுத்துகிறது. சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப அவ்வப்போது உருவாகும் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக விளங்கக்கூடிய ஒரு அறிவார்ந்த செயல்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.


2.சமவாய்ப்பு, உள்ளடக்குதல் மற்றும் சமூகநீதி


சாதி, பாலினம், புவியியல் அமைவிடம் மற்றும் திறமை ஆகியவற்றில் கல்விக்கான சமத்துவத்தை உறுதி செய்வதற்கு தமிழ்நாட்டின் சமூகநீதி மரபில் வேரூன்றிய, வலுவான செயல்திட்டத்தை இந்த இயல் கோடிட்டுக் காட்டுகிறது. இது பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் (CWSN) மற்றும் முதல் தலைமுறை கற்போர் உள்ளிட்டவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதைக் கருத்தில் கொண்டுள்ளது. கற்றல் செயல்முறைகளிலிருந்து எந்தக் குழந்தையும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய, உதவித்தொகைகள், விடுதி வசதிகள், தடைகளற்ற உள்கட்டமைப்பு வசதிகள் முதல் உள்ளடங்கிய கல்விக்கான கலைத்திட்டம் மற்றும் தகைசால் தணிக்கை வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உத்திகளை இந்த இயல் விவரிக்கிறது.



3.அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு (BLN)


வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு அடிப்படைத் திறன்கள் அவசியம் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த இயல் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை (BLN) மாநிலத்தின் மிக முக்கியமான கல்வி முன்னுரிமையாக நிலைநிறுத்துகிறது. மூன்றாம் வகுப்பின் நிறைவில் ஒவ்வொரு குழந்தையும் வாசித்தல் மற்றும் கணிதத் திறனை அடைவதை உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டம் ஆகும். வயதுக்கேற்ற மதிப்பீடுகள், குறைதீர் கற்பித்தல், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் சமூக ஈடுபாடுகள் ஆகியவற்றின் மூலம் - குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் ஆரம்பகால கற்றல் குறைபாட்டினை நீக்குவதற்கான ஒரு காலக்கெடுவுடன் கூடிய வழிமுறைகளை இந்த இயல் வழங்குகிறது.


4.கலைத்திட்டம், கல்வியியல் சீர்திருத்தம் மற்றும் மொழிக் கொள்கை


தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக விரைவாக மாறிவரும் உலகில், பள்ளிக் கலைத்திட்டத்தை இந்த இயல் அனுபவப்பூர்வமாகவும், வினவுதல் அடிப்படையிலும், திறன் சார்ந்ததாகவும் மறு கட்டமைப்பு செய்கிறது. இது மனப்பாடம் செய்வதைக் குறைப்பது, சமூக- மனவெழுச்சி சார்ந்த கற்றலை வலுப்படுத்துதல், தமிழ்நாட்டின் கலாச்சார, பாரம்பரியத்தைப் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பது போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது. கலை, விளையாட்டு மற்றும் செயல் திட்டம் அடிப்படையிலான கற்றல் போன்ற பன்முகக் கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் அனுமதிக்கும் பன்மொழிக்கல்வி, சமச்சீரான இருமொழிக் கொள்கை, கருத்தியல் தெளிவு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிக்க, குழவிப்பருவ - தாய்மொழி வழிக்கற்பித்தல் ஆகியவற்றை இந்த இயல் கோடிட்டுக் காட்டுகிறது.


5. 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள், எதிர்காலத் திறன்கள் மற்றும் எண்மக் கல்வியறிவு


கணினி யுகத்தில் தொழில்திறன் மற்றும் குடிமைப் பண்புகளை மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக எதிர்காலத் திட்டங்களைக் கட்டமைப்பதற்கான கூர் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், நிதியியல்சார் கல்வியறிவு, எண்மத் திறன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உலகளாவிய குடிமையுரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக இந்த இயல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறியீட்டு முறை, எந்திரனியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றிற்கான TN-SPARK திட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது. மேலும், கல்வித் தொலைக்காட்சி மற்றும் மணற்கேணி செயலி போன்ற நேரடி மற்றும் இணையவழிக் கற்றல் (blended learning) முறையினை விரிவுபடுத்துகிறது. இந்த இயல் 21ஆம் நூற்றாண்டின் அத்தியாவசியக் கற்றல் கூறுகளாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தொழில்நுட்ப அணுகல் வேறுபாடுகள், காலநிலைசார் கல்வியறிவு, தொழில் முனைவு மற்றும் குடிமைப் பொறுப்புகள் ஆகியவற்றைக் குறிப்பாகக் கோடிட்டுக் காட்டுகிறது.



6.மதிப்பீட்டுச் சீர்திருத்தங்கள்


மதிப்பீடு, தண்டனைக்குரியதாக இல்லாமல், கற்றலுக்கு ஆதரவாகவும், குறையறிதலுக்காகவும் இருத்தல் வேண்டும் என்பதை இந்த இயல் வலியுறுத்துகிறது. இது மதிப்பீட்டில் தற்போது பெரும்பங்கு வகிக்கும் நினைவாற்றல் சார்ந்த தேர்வுகளிலிருந்து விடுபட்டு தொடர்ச்சியான வளரறி மற்றும் திறன் சார்ந்த மதிப்பீட்டு முறைக்கு முன்னேறுவதற்கான தீவிர மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. செயல்திட்டம், ஒப்பார் குழு மதிப்பீடு மற்றும் சுயமதிப்பீடு போன்ற நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த இயல், 1-8 வகுப்புகளில் தேக்கம் என்பதை மறுக்கும் கொள்கைக்கு தமிழ்நாட்டின் பொறுப்புறுதியை மீளவும் வலியுறுத்துவதோடு, இணைப்புப்பயிற்சிகள், கற்றல் விளைவுகளின் கண்காணிப்பு, பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்கள் மற்றும் முதல் தலைமுறைக் கற்போருக்கான தனித்துவமான ஆதரவு ஆகியவற்றைக் கொண்ட ஒரு முறைமையை அறிமுகப்படுத்துகிறது.


7.ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் பணிசார் மேம்பாடு


கல்விச் சீர்திருத்தங்கள் அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஆசிரியர்களைப் பொறுத்தே இருக்கும் என்பதை இந்த இயல் வலியுறுத்துகிறது. பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சித் திட்டங்களை வலுப்படுத்துவதற்குப் பயிற்சிப் பார்வை எண்மத் தளம், ஒப்பார்குழு கண்காணிப்பு, சிறு சிறு கட்டங்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாடு ஆகியவற்றை முன்வைக்கிறது. உள்ளடங்கிய கல்வி, எண்மக் கற்பித்தல், மற்றும் சமுதாய மனவெழுச்சிக் கற்றல் ஆகியவற்றின் திறன்களை வளர்ப்பதற்காக சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. பழங்குடியின, மலைப்பாங்கான மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, சூழல்சார் பயிற்சியும் பள்ளி அளவிலான சவால்களைச் சந்திப்பதற்கான கூடுதல் உதவியும் அளிக்கப்படவுள்ளது.


8.பாதுகாப்பு, உள்ளடங்கிய பள்ளிகள் மற்றும் முழுமையான குழந்தை மேம்பாடு


பள்ளி என்பது கற்றுக்கொள்வதற்கான ஓர் இடம் மட்டுமல்லாமல் அது, தனிப்பட்ட திறன்களை வளர்ப்பதற்கான இடமுமாகும். இந்த இயல் உடல் ரீதியான பாதுகாப்பு, மனநல வளர்ச்சி மற்றும் சமூகம்சார் உள்ளடங்கிய பள்ளிகளை உருவாக்குவதற்கான ஒரு விரிவான பார்வையை முன்வைக்கிறது. இது குழந்தைகளின் உரிமைகள், பாலின விழிப்புணர்வு, மனநலம், உடல் தகுதி, கலைகள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை பள்ளிச்சூழலுடன் ஒருங்கிணைக்கிறது. முன்னோடித் திட்டங்களான மகிழ் முற்றம் (மாணவர் மன்றம்), ஆலோசனை உதவி மையங்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உடல்நலம் சார்ந்த முன்னெடுப்புகள் போன்றவை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், மாணவர்கள் நம்பிக்கை உடையவர்களாகவும் மற்றவர்களிடம் பரிவு காட்டுபவர்களாகவும் வளர முடியும்.


9.எதிர்காலப் பள்ளிகளுக்கான நெகிழ்வுத்தன்மை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு


எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறைக்குரிய உள்கட்டமைப்புகள் தேவை. திறன்மிகு வகுப்பறைகள், தடையற்ற அணுகுதல், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் மற்றும் எண்மக் கருவிகள் மூலம் பள்ளிகளை நவீனமயமாக்கும் மாநிலத்தின் திட்டத்தை இந்த இயல் விவரிக்கிறது. பசுமை வளாகங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் சூரியசக்தி போன்ற நிலைத்தன்மைக்கான அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாதிரிப் பள்ளிகள் மற்றும் வெற்றிப் பள்ளிகள் போன்ற முன்னெடுப்புகள் தகைசால் மையங்களாக அமைக்கப்பட்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அவற்றின் சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

10. சமூக ஈடுபாடு மற்றும் நிருவாகப் பரவலாக்கம்

பள்ளிகள் எவ்வாறு உண்மையான சமுதாய நிறுவனங்களாக மாற முடியும்? இதற்குப் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமுதாயம் ஆகியவை பள்ளியுடன் இணைந்து செயல்படும் ஒரு 'கீழிருந்து மேல்' செல்லும் வடிவிலான பள்ளி நிருவாக அமைப்பைப் பரிந்துரைப்பதன் மூலம் இந்த இயல் பதிலளிக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMC) பெருநிறுவன சமூகப் பொறுப்புக் (CSR) கூட்டாண்மைகள், முன்னாள் மாணவர் வலையமைப்புகள் ஆகியவை நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி எனும் முன்முயற்சியின் முக்கிய அங்கங்களாகத் திகழ்கின்றன. இந்த இயல் உள்ளூர் அளவிலான திட்டமிடல், வெளிப்படையான கண்காணிப்பு, அதிகாரம் பெற்ற கல்விசார் பொறுப்பாளர்கள் ஆகியவற்றின் மூலம் பள்ளிகள் தங்கள் சமூகங்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதையும் அதற்கேற்பச் செயல்படுவதையும் உறுதிசெய்கிறது.


முடிவுரை


மாநிலம் முழுவதிலும் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான தெளிவான, உள்ளடங்கிய மற்றும் எதிர்காலம் சார்ந்த வழிகாட்டுதலை தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை 2025 வழங்குகிறது. சமத்துவம், சமூக நீதி மற்றும் பண்பாட்டுப் பெருமிதம் ஆகிய கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டுள்ள இக்கல்விக்கொள்கை அடிப்படைக் கற்றல், கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், ஆசிரியர் மேம்பாடு, மதிப்பீடு, எண்ம ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயப் பங்கேற்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைக் கோடிட்டுக்காட்டுகிறது. கற்போர் ஒவ்வொருவரின் முழு திறனையும் வளர்க்கும் பாதுகாப்பான மற்றும் எழுச்சியுறு இடங்களாகப் பள்ளிகளை மாற்றத் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கண்ணியத்துடன் கற்றுக்கொள்ளவும், தன்னம்பிக்கையுடன் வளரவும், விரைந்த மாறுதலுக்கு உள்ளாவதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுமான உலகில் வளம்பெறவும் தேவையான கல்வியை உறுதி செய்யும் அர்ப்பணிப்பே தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையின் இதயமாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments